1066 நன்மையை அறிந்தேன்
இடையினில் சிறுசிறு
தடைகளும் வருது
என்மனம் அதனால்
சஞ்சலம் கொள்ளுது
தடைகளைத் தாண்டி
வந்திடும் போது
எங்குநீ சென்றாய்
அதைமட்டும் கூறு
ஊரில் பலரும்
பலவிதம் பேசினார்
என்னுறவைப் பற்றி
குறைபல சொன்னார்
ஊற்றமும் சுற்றமும்
தடுத்திட முயன்றார்
உன்னுறவினைத் துறந்திட
பலவிதம் முனைந்தார்
பேதை அவரென்
மனம் மறிவாரோ
பிறந்தது உனக்கென
அவர் உணர்வாரோ
காதலின் உயர்வை
அவர் புரிவாரோ
கலங்கம் கூறினால்
வென்றிடு வாரோ
பிரிந்திட வென்றா
காதலும் கொண்டேன்
மறந்திட வென்றா
மனத்தினைத் தந்தேன்
உயிரொடு உடலும்
உனதென அறிவேன்
உயிர் பிரிந்தாலும்
உன்னை இழக்கேன்
இத்தனை தடைகள்
தாண்டியே வந்தேன்
என்னிலை சொல்ல
தேடியே வந்தேன்
எங்குநீ சென்றாய்
என்பதை அறியேன்
ஏனிதைச் செய்தாய்
எனவும் புரியேன்
பக்தியின் பரவசம்
ஒருபுறம் இருக்க
பிரிவின் துயரம்
மறுபக்கம் நெருக்க
தரசனம் தந்தால்
உய்ந்திடுவேனே
தாமதம் செய்ய
மரித்திடுவேனே
அதுதான் உனது
விருப்பம் என்றால்
அபலை அதற்கும்
சம்மதம் சொல்வேன்
வாழ்வோ சாவோ
இரண்டிலும் உள்ள
நன்மையை மட்டும்
நானே அறிவேன்
மத்திகிரி, 14-2-2019, இரவு10.10