381 நினைக்க வேண்டும்
அலைமோதும் மனதுக்கோர் அமைதிவேண்டும்
அடங்காத மதிக்கும் ஓர் எல்லை வேண்டும்
நினைவாலும் மனதாலும் நாடவேண்டும்
நித்தம் உன்பாதமே நான் தொழவேண்டும்
கண்ணுக்குப் புறம்பாக நீ நின்றபோதும்
கருத்துக்கு எட்டாது ஆனபோதும்
உணர்வின் ஊடாக என்னுள் வந்து
ஒன்றாகி என்னையும் நிதம் ஆளவேண்டும்
சொன்னதைச் சொல்லியே வந்தபோதும்
ஒன்றும் சொல்லாமலே நான் நின்றபோதும்
சொல்லாமலே என்னை அறிந்த நீயும்
சொந்தமாக்கி உன்னுடன் வைக்கவேண்டும்
ஆரவாரம் மிகுந்த இவ் வுலகினிலே
அதனிடை வாழ்க்கையின் ஓட்டத்திலே
ஆயிரம் நெருக்கங்கள் சூழ்ந்திருந்தும்
அவற்றிடை உன்னையும் நினைக்க வேண்டும்
ஆயினும் நானுன்னை மறந்திட்டாலும்
அதற்கு காரணம் எதுவாயினும்
ஆதியில் நான்கொண்ட அன்பை எண்ணி
ஆட்கொண்டும் மீண்டும் @அருளவேண்டும்
31-1-16, மதியம் 2.55, மத்திகிரி
382 இன்பமயம்
எல்லாம் இன்பமயம்
உனைப்பாடி துகிக்கையிலே
உன்படைப்பை நினைக்கையிலே–எல்லாம்
விண்படைத்து மண்படைத்து
வெவ்வேறு கோள்படைத்து
விதவித உயிர்படைத்து
என்னையும் உடன்படைத்த–தெல்லாம்..
பகலென்றும் இரவென்றும்
பலவித நிலைப்படைத்து
பாங்குடன் வாழ்வதற்கு
விதிபல சமைத்த-தெல்லாம்
வாழ வழிகாட்ட
வகையாக நெறிதொக்குது
வாழ்ந்திடும் வாழ்க்கையில்
கடமையும் வகுத்த-தெல்லாம்
உன்வழி வாழ்வோர்க்கு
உன்னத நிலைதந்து
உன்வழி மறந்தோர்க்கு
நல்ல அறம்தந்த–தெல்லாம்
இத்தனை தந்தபின்னும்
எம்மையும் தருவதற்கு
பத்திஎன்ற ஒருநிலையை
பரிவுடன் அளித்த-தெல்லாம்
2-2-16, மதியம் 2.50 மத்திகிரி
383 முடிவில்லா முக்தி
முடிந்தது பயணம் புவியோடு
முடிவில்லா முக்தியை அடையும் போது
இனி பயம்நமக் கேது மில்லை
எரிநரகம் நாம் என்றும் சேர்வதில்லை
விட்டுச் சிலகாலம் பிரிந்தாலும்
மீண்டும் சந்தித்து மகிழ்ந்திருப்போம்
புவியின் பாடுக்கு முடிவு கண்டோம்
புதுவாழ்வில் புகுந்து மகிழ்வு கொள்வோம்
நமக்கு முன்னாகச் சென்றவரை
நாம்கண்டு ஆனந்தம் கொண்டிடுவோம்
நம்பின் வரப்போகும் பக்தருக்காய்
நாமும் ஆவலாய்க் காத்திருப்போம்
பெற்றோர் உற்றோர் துயருற்றாலும்
நம்பிரிவைத் தாளாமல் கணீர்விட்டாலும்
நம் பக்திக் கண்டு அவர்களுமே
நாதனுக் கென்றும் நன்றி சொல்வார்
நம்மையும் மீண்டும் பார்க்க வேண்டி
நாளும் பக்தியில் வாழ்ந்திருப்பார்
தம் ஓட்டம் ஒடி முடித்தபின்னே
நம்முடன் வந்து சேர்ந்து கொள்வார்
ஆகையால் ஆனந்தம் கொண்டாடிடுவோம்
ஆரவாரம் செய்து பாடிடுவோம்
இந்த நம்பிக்கை பிறரும் பெற
இறைவனை வேண்டிக் கேட்டிடுவோம்
4-2-2015, காலை, 10.30, மத்திகிரி
384 உணர்ந்தும் உணராதவர்
உணர்ந்து கொள்ள வில்லை
உன்னை புரிந்து கொள்ளவில்லை
உன்னுடன் வாழ்ந்த போதும்
உனையீன் றெடுத்த போதும்
பழகப் பழக புளிக்கும்
பாலும் என்ப துண்மை
பழகி அறிய மறுத்ததால்
பாவம் அவர்தம் நிலமை
சொந்தம் அவர்க்காய் ஆனாய்
சொல்லில் செயலில் வாழ்ந்தாய்
எதனைச் செய்த பின்னும்
ஏது ரைத்த போதும்
ஆனால் உடன்நீ சென்று
அவர்க்கு அடிமை கொண்டு
அவர்தம் தயவில் வாழ்ந்து
அருளில் பெருகி உயர்ந்தாய்
அவரைப் போல ஆனோம்
நீஅறிந்து மீட்ட போதும்
அறியா திருந்தால் நன்மை
அறிந்தும் மறுத்தால் கொடுமை
உணர்ந்தும் உணரா எம்மை
உணர்த்தி காப்பதுன் கடமை
அந்து துணிவால் மீண்டும்
அண்டி வந்தோம் அருளும்
8-2-16, மத்திகிரி, காலை 5.45
385 அஞ்சமாட்டேன்
என்னவோ மீட்டெடுத்தாய்
எனக்குமோர் வாழ்வளித்தாய்
அந்த ஒன்றைமட்டும் எண்ணி
ஆனந்தம் கொண்டிடு வேன்
என்னைக் கேட்டு மீட்கவில்லை
என்நீசம் பார்க்க வில்லை
உன் கருணை ஒன்றினாலே
என்னை நீ ஆட்கொண்டாய்
அதற்கு நானும் உடன்பட்டேன்
அறிந்து கொள்ள செயல்பட்டேன்
எந்தவரை இணங்கினேனோ
அந்தவரை அறிந்து கொண்டேன்
பொறுமை நீயும் காதுநின்றாய்
பிழைபலப் பொறுத்துக் கொண்டாய்
என்னைத் தந்து உன்னில்வாழ
ஏற்ற வழிகாட்டி வந்தாய்
போகும் தூரம் மிகவிருந்தும்
போராட்டம் பல இருந்தும்
இலக்கு நீயாய் இருப்பதாலே
எதனைக் கண்டும் அஞ்சமாட்டேன்
மீட்ட நீயே உடனிருந்து
சேர்க்க வேண்டி முன்நடந்து
ஏற்ற வழி காட்டும்போது
என்ன வேண்டும் இனியெனக்கு?
உன்னை முன்னி றுத்தி
உன்னில் எனை நிறுத்தி
அந்த ஒருபெலத்தி னாலே
அன்றாடம் வாழ்கின்றேன்
8-2-16, மத்திகிரி, காலை 6.15