தகுமோ உனக்கு
உருகி அழைத்தால்
உடன் வரவேண்டும்
உணர்ந்து நீயும்
அருள் தரவேண்டும்
தனித்து இருப்பதும்
தகுதியோ எனக்கு
தனித்து விடுவதும்
தகுமோ உனக்கு
உனக்காக ஒருத்தி
உருகுகின்றாளே
உன்னையே நினைத்து
மறுக்கின்றாளே
என்னைவிட்டு நீ
எங்கு சென்றாயோ
ஏந்திழை என்னையும்
ஏங்க வைப்பாயோ
உனக்கென பக்தர்கள்
உலகினில் உண்டு
உன்னையும் தேடி
வருபவர் உண்டு
என்னையும் அவர்போல்
காக்க வைக்காதே
என்னிடம் வரவுமே
தாமதிக்காதே
விரைந்து அவருக்கு
அருளினைத் தருவாய்
விரும்பியே கேட்கும்
வரங்களைத் தருவாய்
அதன்பின் எனது
நினைவுமே இருந்தால்
அடிமைக்கு அருளிட
இரக்கமும் கொள்வாய்
மேனியும் பசலையால்
வாடியே போச்சு
மெல்லிய தோள்களும்
தளர்ந்துமே போச்சு
தாமதம் செய்வதும்
பாவமும் ஆச்சு
தவிப்பதால் எனது
உயிருமே போச்சு
இதனினும் எந்நிலை
எப்படிச் சொல்ல
என்னவோ செய்திடு
நானென்ன சொல்ல
மத்திகிரி, 14-3-18, மாலை 6.15