தொட்டேன் உன்னை
தொடத்தான் பார்க்கிறேன் முடியவில்லை
தொட்டாலும் கண்ணுக்குத் தெரியவில்லை
தொட்டதும் எதுவெனப் புரியவில்லை
தொட்டதும் உண்மைதான் மறுக்கவில்லை
ஊனால் உடலால் உனைத் தொடவில்லை
உணர்ச்சிகள் மேலிட உறவாடவில்லை
உள்ளத்தில் வந்து குடிகொண்ட உன்னை
உணர்ந்தேன் அதனை மறுப்பதற்கில்லை
எதற்காக நீயும் எனைத்தேடி வந்தாய்
எதைப் பெறவென்று உறவாடி நின்றாய்
அண்டங்கள் அனைத்தும் உனதானபின்னும்
என்பிண்டத்தில் ஏன் குடிகொள்ள வந்தாய்
எல்லாம் இருந்தும் எனையிழந்தாலே
ஏற்காது உன்மனம் என்பதனாலா
அனைத்தையும் படைத்து ஒன்றினை இழப்பது
ஆகாத காரியம் என்பதனாலா
வரவேற்க நானும் வந்து நின்றேனா
வாசலில் வந்தபின்னும் நான் உணர்ந்தேனா
தாளினைப் பணியத் தாள்திறந்தேனா
தயக்கத்தால் என்னையே நான் மறந்தேனா
ஓசையின்றி நீ உள்ளத்தில் வந்தாய்
உனதாக்கி உள்ளத்தில் குடியுமே கொண்டாய்
அதன்பின் அறிந்தேன் ஐயனே உன்னை
அனுபூதி அடைந்து தொட்டேன் உன்னை
மத்திகிரி, 18-3-18, மதியம் 2.30