956 தோல்வி உனது
ஏட்டிக்குப் போட்டி
என்னுடன் போட்டால்
இறுதியில் தோல்வி
உனக்குத்தான் சொன்னேன்
இதையும் தெரிந்து
வம்புக்கு வந்தால்
இதற்கும் மேலே
நானென்ன சொல்வேன்
போரிடும் போது
வீரருக்குள்ளே
பொதுவான விதி
ஒன்றுமே உள்ளது
சம்பலம் உள்ளவர்
மட்டுமே சண்டை
போடனு மென்று
விதியும் உள்ளது
வம்புக்கு நானும்
வரவில்லை என்று
எத்தனை முறை
உன்னிடம் சொல்வது
வேடிக்கை உனக்கு
காட்டணும் என்றால்
நானா அகப்பட்டேன்
வேறென்ன சொல்வது
உனது லீலைக்கு
ஆளிலில்லை நானென
எத்தனை முறை
முன்னமே சொன்னேன்
இதற்கும் மேலே
மேடை ஏற
தெம்பும் இல்லை
தெளிவாய்ச் சொன்னேன்
இதுவரை ஆடிய
ஆட்டத்தினாலே
இருந்த தெம்பும்
காலியாய்ப் போச்சு
இன்னும் நானே
ஆடணும் எனநீ
சொல்வதுதான் இங்கு
வம்பாய்ப் போச்சு
ஆயினும் நீயோ
விடவும் மாட்டாய்
அதுவும் எனக்கு
புரிஞ்சுப் போச்சு
ஆகவே நானும்
ஆயத்த மானேன்
இதுவும் உனக்கு
வழக்கம் ஆச்சு
ஆடும் போதே
மயங்கி வீழ்ந்தால்
தூக்க நீதான்
வரணும் என்பதை
உணர்ந்து நீயும்
கூடவே வந்திடு
இல்லாவிட்டால்
தோல்வி உனது
மத்திகிரி, 31-08-2018 (1-9-2018), 12.30 a.m.
957 எனது தகுதி
சோகம் ஒன்று இழையோடிடுது
சொல்லையும் செயலையும் புரிந்திட மறுக்குது
வாழ்ந்திடும் வாழ்வில் வளமையை இழக்குது
வறியவனாக வாழ்ந்திட வைக்குது
காரணம் எதுவெனத் தேடிடும்போது
ஆழ்மனதில் உள்ள எண்ணமே என்குது
வெளியாக எத்தனை வேடமும் போட்டினும்
உள்ளாக வெறுமை நிறைந்தே இருக்குது
நீவைத்த நீதியை நினைத்திடும்போது
நெஞ்சமும் மருங்கி உள்ளே சுருங்குது
எள்ளவேனும் அதையடையாமல்
என்னுளம் ஏய்த்து என்னையே வஞ்சிக்குது
தகுதியைப் பார்த்து மீட்காத போதும்
மீட்பையே தகுதியாய் எனக்குமே இருக்குது
ஆயினும் அதனின் மேன்மையை எண்ணிட
ஐயனே என்னுள்ளம் ஒதுங்கிட நினைக்குது
இழந்தது எத்தனை எப்படிச் சொல்ல
என்னையே ஏய்த்ததை எவரிடம் சொல்ல
இந்த தகுதி ஒன்றே அன்றி
என்னிடம் உள்ளது எதுவெனச் சொல்ல
அதனை எண்ணி சோகத்தில் ஆழ்ந்தேன்
அதுதரும் பாரத்தால் உள்ளத்தில் தாழ்ந்தேன்
ஆயினும் நீதந்த மீட்பினால் மீண்டும்
ஐயனே உன்னடி சரணம் புகுந்தேன்
மத்திகிரி, 3-9-2018, மதியம் 2.50
958 உனதை மீட்டாய்
என்றுமே உள்ள போராட்டம்
உள்ளத்தில் மாறாத மாறாட்டம்
என்னதான் முயன்று பார்த்தாலும்
இறுதிவரை போகா சதிராட்டம்
ஆதியில் கொண்ட அன்பதனை
அடிக்கடி நானும் இழந்திருந்தேன்
அடுத்தடுத்து வரும் சோதனையால்
அதையே மெல்ல மறந்திடுவேன்
எத்தனை உண்மையாய் நீயிருந்தும்
உன்னையே மறுக்க மறுத்திருந்தும்
புத்தியால் அதைநான் அறிந்திருந்தும்
பக்தியில் நானும் தோற்றிடுவேன்
மாறிடும் மனதும் மாற்றிடுமே
மனதுடன் மதியும் இணைந்திடுமே
உயிர்படும் வேதனை அறிந்திருந்தும்
உன்னிடம் திரும்பிட மறுத்திடுமே
வேறு வழியின்றி இரங்கி நீயும்
விரைவாய் மீண்டும் மீட்டிடவே
வாடி நின்ற உயிர் மீண்டு
விரைந்திடும் உன்னையே சரணடைய
உனதை உனக்காய் மீட்டபின்னே
உயிரும் உணரும் உண்மையினை
என்னதான் உன்னையே மறந்தபோதும்
என்னை நீ புறக்கா மேன்மையினை
மத்திகிரி, 5-9-2018, மதியம், 2.30
959 தாயைப் போல
கருணையும் காதலும்
கலந்தே இருக்கும்
காதலின் மூலமே
கருணை விளங்கும்
ஏழை நானிதை
அறிந்தே சொன்னேன்
எவரும் அறியா
இரகசியம் புரிந்தேன்
கரையேற்ற வென்று
இரங்கியே வந்தான்
கருணையின் மிகுதியால்
தன்னையேத் தந்தான்
ஆயினும் நானதை
அறியா திருந்தேன்
அதனின் மேன்மை
புரியா திருந்தேன்
மரத்தில் தொங்கி
மாள்வதின் மூலம்
கருணை எவ்விதம்
விளங்கிடும் என்றேன்
சேயின் நோயை
போக்க வென்று
மருந்தை உண்ணும்
தாயைப் போல
எனது பாவச்
சுமையைப் போக்க
ஏற்றான் அவனும்
தன்மீ தென்று
எனது உள்ளம்
உணரும் வண்ணம்
அன்னையின் அன்பை
காட்டினான் அவனும்
அந்தக் கருணையில்
அவனது அன்பை
அறிந்தே நானும்
கசிந்தே மனதில்
எனது அன்பை
காட்டிட வேண்டி
ஏற்றேன் அவனது
காதலை மனதில்
மத்திகிரி, 6-9-2018, இரவு,11.30
960 அடிக்கடி வருவேன்
வந்தடி பணிந்தேன்
வள்ளலே மீண்டும்
வாழ்த்தியே பாடினேன்
உன்னையே நானும்
எந்தையே இறைவா
என்னுளம் தேடி
வந்திட வேண்டும்
விரைந்துமே நீயும்
சிந்தையின் போக்கில்
போகிறேன் நாளும்
செயல்பல செய்கிறேன்
வாழ்விலே நானும்
அவற்றின் இடையே
உன்னிடம் வந்து
அடிக்கடிப் பேசுவேன்
உன்னிடம் நானும்
வாழத்தான் வாழ்வை
வள்ளலே தந்தாய்
வாழ்ந்திட நீயும்
உன்னருள் தந்தாய்
ஒவ்வொரு நாளையும்
துய்த்துமே வாழ
உன்னன்பை உணர
உணர்வையும் தந்தாய்
என்னுடன் நீயும்
இருப்பதை உணர்ந்து
என்வாழ்வில் ஒன்றாக
கலந்ததை நினைந்து
உன்னோடு வாழும்
பேரினை உவந்து
உன்னையே துதிப்பேன்
பக்தியில் நிலைத்து
மத்திகிரி, 7-9-2018, மதியம், 2.50