981 இறைவனின் பதில்
ஒருகேள்வி உன்னிடம்
நான்கேட்க வேண்டும்
அதற்கான உன்பதில்
எனக்குமே வேண்டும்
எதற்காக இத்தனை
பிரிவினை வைத்தாய்
அதன்மூலம் எதனை
நீயுமே சாதித்தாய்
ஒன்றான இறைவன்
நீ என்பதானால்
உலகத்தின் மாந்தரும்
ஏன்னுன்னை மறந்தார்
உள்ளாக இருந்து
நீயுமே ஆண்டால்
எதனால் உன்னையும்
உணராது போனார்
என்னிந்த கேள்விக்கு
உன்பதில் வேண்டும்
உடனே எனக்கு
நீசொல்ல வேண்டும்
“இதுஒன்றும் புதிதான
கேள்வியே இல்லை
நீயொன்றும் புதிதாக
கேட்கவும் இல்லை
ஆயினும் நானுமோ
பதில்தர வில்லை
அதற்கான அவசியம்
எனக்குமே இல்லை
அதற்கான காரணம்
உனக்குமே தெரியும்
அதைமட்டும் மீண்டுமே
சொல்லிட முடியும்
உன்மன சாட்சியை
நீயுமே கேளு
அதுகேட்கும் கேள்விக்கு
பதிலையும் சொல்லு
அதன்பின்னாலும்
கேள்வி இருந்தால்
அதைமட்டும் என்னிடம்
துணிந்துமே கேளு”
இறைவனின் இந்த
கேள்விக்கு என்னில்
எவ்வித பதிலும்
இல்லாது போச்சு
என்மன சாட்சியும்
எனைப்பார்த்து நகைக்க
எந்நிலை முன்னிலும்
பரிதாபம் ஆச்சு
அதன்பின் நானும்
கேள்விகள் கேட்பதை
அறவே விட்டு
மவுனியாய் இருந்தேன்
மத்திகிரி, 1-10-2018, இரவு, 11.45
982 சொல்லிட முடியாது
இதுஒன்றும் எளிதான
காரியம் ஆகாது
எல்லாமே எழுத்திலே
சொல்லிட முடியாது
உள்ளாக உயிர்தேடும்
உயர்வான ஒன்றை
உரைத்திட நமக்கிங்கு
மொழியேதும் கிடையாது
மொழிமூலம் கூறும்
செய்திகள் யாவுமே
மூளைக்கு நாம்தந்த
வேலையே ஆகும்
அதைஒன்றை மட்டுமே
ஆதாரம் ஆக்கியே
அறிவிக்கும் ஏதுமே
அரைகுறை ஆகும்
அதைமட்டும் சார்ந்து
அடுக்கடுக்காய் வைக்கும்
கருத்துகள் யாவும்
காலத்தில் மறையும்
மவுனத்தின் மூலம்
அறிந்திடும் ஒன்று
உள்ளத்தில் இறங்கி
உறுதியாய் நிற்கும்
அதையுமே அறிந்திட
விழைந்திடும் போது
அவனருள் வந்து
உயிருக்குக் கூறும்
அதையும் அறிந்த
உயிரும் இறுதியில்
அவனடி நாடி
அமைதியை அடையும்
அதன்பின் மொழியின்
எல்லையைக் கடந்து
அறிவிக்க இயலாமல்
மவுனமும் காக்கும்
மத்திகிரி, 2-10-2018, இரவு, 10.10
983 உன்பின் நடப்பேன்
தொலைந்தாலும் தேடியே வந்திடுவாய்
தோள்மீது போட்டு மீட்டிடுவாய்
தொலைந்தபின் திகைத்து நிற்ககையிலே
திசையைக் காட்டிட வந்திடுவாய்
அசதி, அயர்ச்சி வரும்போது
அதனைப் புரிந்திட உதவிடுவாய்
வசதி, வாய்ப்புகள் தந்து மீண்டும்
உயிர்த்து எழுந்திட உடன் நிற்பாய்
இதற்கு மேலே என்ன வென்று
எண்ணிக் குழம்பித் தவிக்கையிலே
அதற்கும் மேலாய் நானிருக்கேன்
என்றே அணைத்துத் தேற்றிடுவாய்
மனதில் புரியா பயம்வந்து
மனதொடு மதியைத் தோற்கடிக்க
அபயம் தந்து பயம் நீக்கி
துணிவு தந்து தோள்கொடுப்பாய்
மானிட வாழ்வின் நிலைகண்டு
மனிதனாய்ப் பிறந்தது தவறென்று
படைத்த உன்னையேபழி கூற
அதனின் மேன்மையை புரியவைப்பாய்
அதன்பின் இந்த பிறவி தந்த
ஐயனே உந்தன் அருள் உணர்ந்து
அசதி, அயர்ச்சி, பயம் நீங்க
அனுதினம் உன்பின் நான் நடப்பேன்
மத்திகிரி, 3-10-2018, இரவு, 11.30
984 இதுபோல் துதிப்பேன்
நன்மைகள் செய்திடும்
உன்னைநான் பாடணும்
நன்றியால் என்னுளம்
உன்புகழ் கூறணும்
உன்னிலே ஒன்றியே
நானுமே வாழணும்
உன்னடி அதற்கு
தினமுமே தேடணும்
சொல்லிடச் சொல்லிட
சுவைக்குது என்மனம்
சொல்லிட மேலுமே
தூண்டுது அனுதினம்
சொல்லிடும் போதிலே
கண்களும் கசிந்திட
சொல்லிட மொழியின்றி
வருவேனே உன்னிடம்
அனுதின வாழ்விலே
உன்னருள் காண்கையில்
அதைத்தரும் உன்னையும்
நானுமே நினைக்கையில்
என்னாவி பண்பாடி
உன்னையே துதிக்கையில்
என்னையே தந்தேனே
முற்றாக உன்கையில்
தந்ததை ஏற்றுமே
தாங்கியே வருகிறாய்
தந்ததால் அன்பினை
அதிகமாய்க் காட்டுறாய்
தந்திடும் தகுதியோ
இல்லாத போதிலும்
தந்ததைத் தகுதியாய்
ஏற்றுமே கொள்கிறாய்
இந்தஉன் மேன்மையை
எண்ணியே பார்க்கையில்
என்மனம் துதிக்குது
உன்னருள் நினைந்துமே
இதுபோது இதுபோதும்
என்றுமே கொண்டாடி
இதுபோல துதிப்பேனே
நானுனைப் பண்பாடி
மத்திகிரி, 4-10-2018, இரவு, 11.50
985 விளக்கமே இல்லை
ஏதுமே பேசாமல் இருந்திட வேண்டும்
எழுத்தையும் படிப்பையும் நிறுத்திட வேண்டும்
மனதும் சிந்தையும் முடங்கிட வேண்டும்
மவுனமாய் உன்னடி வந்திட வேண்டும்
எழுதியே காட்டுறார் எண்ணற்ற விதத்தில்
எடுத்துமே சொல்கிறார் அறிந்திட்ட வரையில்
ஆயினும் அனைத்தையும் கடந்துநீ நிற்கையில்
உன்னையும் அறிவது இல்லையே என்கையில்
தன்குறை அறிந்தவர் மட்டுமே தேடுவார்
தன்நிலை அறிந்தவர் மட்டுமே உணருவார்
உன்நிலை கடந்துநீ எம்மிடம் வந்ததை
உணர்ந்தவர் மட்டுமே உன்னையும் அறிவார்
இல்லாத இடத்திலே உன்னையும் தேடினால்
இறுக்கின்ற நீயும் இல்லாது போவாய்
இனிமேல் ஆகாது என்றுமே கூறினால்
இதயத்தில் வந்து குடியுமே கொள்வாய்
உள்ளாக வந்து உரைக்கின்ற உன்னை
உணர்கின்ற வழியை எளிதாக்கி வைத்தாய்
எளிதான பக்தியை செய்திடும் போது
எனையாண்டு நீயும் என்னையும் மீட்கிறாய்
அந்த மீட்பை அடைந்தபின் நானும்
அமைதலாய் உன்வழி நடந்திட வேண்டும்
ஆயிரம் விளக்கம் அதற்குமே தந்து
அதைக்கூற மொழியில்லை புரிந்திட வேண்டும்
மத்திகிரி, 5-10-2018, இரவு, 11.30