1008 இயன்றதைச் செய்
ஒதுங்கிட வழியில்லை உணர்ந்துமே கொண்டேன்
உழைத்திட பெலனில்லை புரிந்துமே கொண்டேன்
இடையினில் உன்சித்தம் எதுவெனத் தெரியாது
கிடந்துநான் புலம்புறேன் வழியுமே காணாமல்
தேவை உள்ளவர் தேடியே வருகின்றார்
தேவை இதுவெனத் தெளிவாகச் சொல்கின்றார்
ஆயினும் அதற்கான விடையேதும் இல்லாமல்
தூக்கிச் சுமந்திட துணிவுமே வரவில்லை
தேடியே சென்று செய்வதும் ஒருகாலம்
தேவையை அறிந்து உழைப்பதும் ஒருகாலம்
தேகமும் சோர்ந்தபின் மனதுமே மறுத்திட
வாய்மூடி இருக்கவும் வந்திடும் ஒருகாலம்
ஆயினும் எந்நிலை அடுத்தவர் புரிவாரோ
ஆயிரம் சொன்னாலும் அவருமே ஏற்பாரோ
அவரோடு நீசேர்ந்து இன்னமும் எதிர்பார்க்க
எந்நிலை புரிந்தவர் எவரேனும் இருக்காரோ
இயலாத போது எதிர்பார்க்கக் கூடாது
இல்லாத போது கேட்கவும் கூடாது
இப்படிச் சொல்லியும் ஏற்காத போது
என்னதான் செய்வது அதைமட்டும் கூறு
இதற்கான விடையுமோ எனக்குமே கிடைக்காது
ஏன்னென்றால் உன்பதில் தெளிவாக உள்ளது
செய்வது நீயென உணர்ந்த பின்னாலும்
எப்படிக் கேட்டாலும் பதிலுமே கிடைக்காது
அதனாலே ஒதுங்கிட வழியேதும் கிடையாது
ஆயிரம் சொன்னாலும் உனக்கவை ஏற்காது
இயன்றதைச் செய்கிறேன் எனச்சொல்லும் வரையிலும்
ஓங்கிய உன்கோலும் ஒருபோதும் தாழாது
மத்திகிரி, 8-11-2018, இரவு 11.10௦