488 ஒதுங்கணும்
அமைதியாய் வாழ
பழகிட வேண்டும்
அவசரப் படுவதை
நிறுத்திட வேண்டும்
வாழ்வின் ஓரம்
வந்ததின் பின்னே
பாரம் சுமப்பதை
நிறுத்திட வேண்டும்
முடியா தென்பது
தெரிந்த பின்னாலே
முயற்சி செய்வேன்
என எண்ணாமல்
முதுமையின் தன்மை
அதனையும் எண்ணி
பொறுமை காக்க
பழகிட வேண்டும்
இளைய தலைமுறை
எடுத்துமே செய்ய
இடமும் தந்து
ஒதுங்கிட வேண்டும்
நம்மை விட்டால்
நன்றாய் செய்ய
யாரும் இல்லை
என்பதை விடணும்
எதற்கெடுத்தாலும்
தலையை நுழைத்து
எனக்கும் தெரியும்
என்பதைக் காட்ட
பிறருக்கு அதனால்
வருகின்ற எரிச்சல்
புரிந்துமே கொள்ள
முயன்றிட வேண்டும்
ஏதோ இதுவரை
இயன்றதைச் செய்தாம்
இனிபிறர் செய்ய
வழியை விடுவோம்
தேடியே வந்து
கேட்டால் மட்டும்
இயன்ற மட்டும்
வழியும் சொல்வோம்
இதனால் வருகிற
அமைதியை எண்ணி
இருகரம் கூப்பி
நன்றியும் சொல்வோம்
8-12-2018 1.50