1065 காதினில் வாங்கு
நானென்ன சொன்னாலும்
நீகேட்ப தில்லை
எனக்கெனத் தனியாக
வாழ்வொன்று இல்லை
எல்லாமே என்வாழ்வில்
நீயாக்கிப் போனாய்
அதன்பின் தனியாக
எதற்காகக் கேட்கிறாய்
சொன்னாலும் அதையென்ன
செய்யவாப் போகிறாய்
இதுவரைக் கேட்டதில்
எத்தனைச் செய்தாய்
அதனையே முதலிலே
எண்ணியே பாரு
அதன்பின் என்னிடம்
நீவந்து கேளு
ஊருக்கு உலகுக்கு
நீகாட்ட வேண்டி
என்னவோ சிலநன்மை
எனக்குமே செய்தாய்
அவையாலே என்மனம்
நிறையாத போதும்
அவைகளைச் சொல்லியே
துதிபாட வைத்தாய்
உண்மையில் என்தேவை
உனக்குமேத் தெரியாதா
உள்ளான என்எண்ணம்
உனக்குமே புரியாதா
வாய்விட்டு நானுமே
பலமுறை சொல்லியும்
காதினில் வாங்காமல்
நீபோக வில்லையா
இன்னும் எதற்காக
இங்கேயே வைக்கிறாய்
என்மூலம் என்னத்தை
சாதிக்கப் போக்கிறாய்
இதுவரை செய்ததே
குப்பையாய் இருக்கையில்
இன்னும் அதைமேலும்
நீயேன் சேர்க்கிறாய்
வீணாக நாறும்முன்
விரைவாக நீக்கிடு
வேண்டாத சுமைகளை
சுமப்பதை நிறுத்திடு
உன்னிடம் வந்திடும்
வாய்ப்பினைத் தந்திடு
விரைவாக வந்துநீ
கரையென்னை சேர்த்திடு
மத்திகிரி, 11-02-2019, இரவு, 11.50