யுகம் போதாது
உன்னருள் நினைக்க
யுகமொன்று போதாது
உன்னன்பை நினைக்க
என்மனம் போதாது
உன்தன்மை எண்ண
என்சிந்தை போதாது
உன்சேவை செய்ய
வாழ்வொன்று போதாது
எமக்கு எல்லையை
அறிந்துதான் தந்தாய்
அதற்குள் வாழ்ந்து
முடித்திட வைத்தாய்
இதற்கு உள்ளாக
உன்னருள் எண்ணி
உய்யும் வழியை
எமக்குமே அளித்தாய்
அதற்குள் எத்தனை
வாழ்க்கை வாழ்கிறோம்
ஆயிரம் ஆயிரம்
வேடங்கள் போடுறோம்
இதற்கே நேரம்
போதலை என்று
இறுதியில் குறைகள்
பலவும் சொல்கிறோம்
இந்த சிறிய
ஒட்டத்தை ஓட
என்னென்ன எத்னம்
நாங்களும் செய்கிறோம்
அதனை ஓடி
முடிக்கும் முன்னே
நோக்கத்தை மறந்து
வாடியே நிற்கிறோம்
இதற்கே இத்தனை
பாடுகள் என்றால்
எம்எல்லை விரிந்தால்
இனிஎன்ன ஆகும்
அதனால் எம்மேல்
இறங்கி நீயும்
குறுகிய எல்லையை
கருணையாத் தந்தாய்
அதன் உள்ளாக
உன்னருள் அடைய
ஐயனே இறங்கி
வழியினை வகுத்தாய்
அதை அறிந்தோர்கள்
உய்ந்து மீள்வார்
அறியாத பேர்கள்
புலம்பியே மாள்வார்
அதனை அறிந்து
அடிக்கடி வந்து
உன்னருள் நினைத்து
உன்னடி பணிந்து
தந்த வாழ்வை
உன்னுள் வாழ்ந்து
தமியனும் உய்ய
பேரருள் புரிவாய்
திருப்பூந்துருத்தி, 14-9-2017, மாலை, 6.50