நன்றி சொன்னேன்
இந்த நாளிலும்
என்னோடு இருந்தாய்
என்னுடன் வாழ்ந்து
நன்மைகள் புரிந்தாய்
அதையெண்ணி நானும்
சன்னிதி வந்தேன்
இருகரம் கூப்பி
திருவடி பணிந்தேன்
உடலின் தேவைகள்
ஒவ்வொன்றாய்ப் பார்த்து
ஒருவித குறைவின்றி
நிறைவேற்றித் தந்தாய்
மனதின் தேவைகள்
எதுவெனப் பார்த்து
மனதார அவற்றை
அதிகமே தந்தாய்
வயதான காலம்
வந்ததினாலே
வசதிகள் பலவும்
செய்துமே தந்தாய்
வரம்பு மீறிநான்
ஏதும் செய்யாமல்
வயதுக்கு ஏற்றப
ஒய்வுமே தந்தாய்
காலத்தில் படுத்து
உறங்கி எழுந்து
கடமைகள் செய்ய
வலிமையையும் தந்தாய்
அதையெண்ணி மீண்டும்
திருவடி வந்தேன்
உறங்கும்முன் உனக்கு
நன்றியும் சொன்னேன்
மத்திகிரி, 4-1-2018, இரவு 11.50