யாரை குறைசொல்ல
என்னவோ வந்தாச்சு
இதுவரை வாழ்ந்தாச்சு
இப்போது வாழ்வுமே
கேள்விக் குறியாச்சு
எதிர்காலம் என்னாகும்
என்பதை எண்ணிட
இப்பொத தலைசுற்ற
பயமுமே வந்தாச்சு
நாம்பேச பிறர்கேட்ட
காலமும் போயாச்சு
நாம்பேசி நாம்கேட்கும்
நிலையும் வந்தாச்சு
வாய்மூடி இருந்தாலோ
வீம்பன் என்கிறார்
வாயைத் திறந்தாலோ
வம்பன் என்கிறார்
எவ்விதக் கேள்வியும்
கேட்காதே என்கிறார்
எப்போதும் புலம்பலா
என்றுமே ஏசுறார்
போட்டதை தின்னுட்டு
போய்விடு என்கிறார்
பேசாமல் மூலையில்
முடங்கிடு என்கிறார்
இதுதான் இப்போது
நமது நிலையாச்சு
எவரை குறைசொல்ல
இதுநம் வாழ்வாச்சு
மத்திகிரி, 2-4-18 இரவு 10.45