941 மவுன மொழி
அமைதியாய் வாழ அடியனை அழைத்தாய்
அதற்கெனவே தான் தனிமையைக் கொடுத்தாய்
அத்துடன் உனது கிரிபையைச் சேர்த்தாய்
அதையெண்ணி உன்னை துதித்திட வைத்தாய்
உனது சித்தம் விசித்திரமானது
உலகோ மனமோ அதைப் புரியாது
உன்னடி வந்து பணிந்திடும் போது
உணர்ந்திட வைப்பாய் உள்ளே இருந்து
ஆரவாரமெல்லாம் அடங்கிட வேண்டும்
அகந்தையு அத்துடன் ஒழிந்திட வேண்டும்
அறிவும் கூட பணிந்திட வேண்டும்
அத்துடன் உனது கிருபையும் வேண்டும்
நீயே வந்து பேசிடும் வரையில்
நெஞ்சில் அமைதி நிலவிட வேண்டும்
அந்த அமைதி சிந்தையில் நிறைய
அதிலே உன்குரல் கேட்டிட வேண்டும்
உலகம் தன்னை சற்றே மறக்க
உள்ளுணர்வோடு உன்னில் கலக்க
ஐம்புலன் தன்னை அத்துடன் இணைக்க
அறியும் மனதுன் அமைதியில் நிலைக்க
அந்த அமைதியில் மூழ்கிடும் போது
அறிவும் மனதும் அதை உணராது
மீண்டும் வெளியே வந்திடும் போது
மவுனமே அன்றி மொழி உரைக்காது
மத்திகிரி, 14-8-2018, இரவு,11.30,
942 நினைத்துப் பாரு
நினைத்துதான் பாரு
நெஞ்சமே நீயும்
நிமலன் உனக்கு
செய்த நன்மையை
துதித்துதான் பாரு
கொஞ்சமே நீயும்
துதிப்பதில் உள்ள
இனிமையும் புரியும்
படித்துதான் பாரு
அவனது வேதம்
பண்புடன் வாழ
வழியதில் கிடைக்கும்
பணிந்துதான் பாரு
மனதினில் நாளும்
பரமபதம் அவன்
பாதத்தில் கிடைக்கும்
கூறிதான் பாரு
அவனது நாமம்
கூ றிடும் போதே
ஊனுடல் உருகும்
அழைத்துமே பாரு
அனுதினம் நீயும்
அதன்பின் புரியும்
அவனது இரக்கம்
பாடித்தான் பாரு
பக்தியால் நாளும்
பரகதி கிடைக்கும்
அக்கணம் உனக்கும்
மத்திகிரி, 15-8-2018, இரவு, 11.45
943 துதிக்க விழைகிறேன்
ஒருவித நிறைவு நெஞ்சினில் இருந்து
உன்புகழ் பாட என்னையும் அழைக்குது
உன்னதமான உன் உயர்வினைக் கண்டு
உன்னிருத் தாளைப் பற்றிடச் செய்யுது
அனுதின வாழ்வை அழகுடன் நடத்துறாய்
அதனிடை உனது கிருபையை காட்டுறாய்
உடல் உயிர் மனதின் தேவையை நினைந்து
ஒன்றிலும் குறைவின்றி நீயே தருகிறாய்
இடையிடையே பல இடர்கள் வந்தாலும்
என்னுள்ளம் அதனாலே தடுமாறி நின்றாலும்
என்தேவை எதுவென உணர்ந்த நீயும்
ஏற்ற வழியிலே நிறைவேற்றி வைக்கிறாய்
அன்றாட வாழ்வு ஒருவாறு போனாலும்
அடுத்த நாள் கவலை தன்போல் வந்தாலும்
எதிர்காலம் என்னாகும் என்றுமே நினைத்தாலும்
எல்லாமே உனக்குள்ளே இருப்பதைக் காட்டுறாய்
இவ்வாறு என்வாழ்வின் எல்லைகள் யாவும்
உன்னுள் தெளிவாக இருப்பதை அறிந்தேன்
அதனை எண்ணியே அனுதினம் உன்னையே
துதித்துப் பாடிட மட்டுமே விழைதேன்
மத்திகிரி, 17-8-2018, இரவு, 11.00
944 மதம் இல்லை
தேடியே வந்தாயே
தெரிதென்னை மீட்டாயே
தெளிவற்ற மனதிலே
தெய்வமாய் நின்றாயே
புரிந்ததால் வரவில்லை
புரிந்தபின் தொழவில்லை
தேடிய குருவானாய்
நடந்தேன் பின்னாலே
தவழ்ந்திடும் குழவியாய்
நானுமே வந்ததால்
தாயாகி சீராட்டி
வளர்த்தாய் என்னை
கற்றிடும் ஆசையால்
கரமேந்தி வந்ததால்
கனிவுடன் ஆசானாய்
சொல்லியேதந்தாய்
குருவாக வந்தநீ
தாயாகி வளர்த்தாய்
ஆசானாய் மாறிநீ
அனைத்தையும் போதித்தாய்
எவ்வித எதிர்பார்ப்பும்
என்னிடம் உனக்கில்லை
எவ்வித காணிக்கை
நீயுமே கேட்கலை
அதனாலே அடியேனும்
உன்னடி நீங்கலை
அடிமையாய் மாறினேன்
வேறெங்கும் போகலை
இறுதி வரையில்
குற்றேவல் செய்துமே
உன்னடி நிழல்வாழ்ந்து
உன்னிடம் சேருவேன்
மதமெனும் எல்லைக்குள்
நீயுமே வரவில்லை
மனமெனும் கோயிலை
நீயுமே புறக்கலை
என்மனக் கோயிலில்
என்றுமே நீவாழ
மதமென்னும் சடங்குக்கு
அங்கே இடமில்லை
மத்திகிரி, 18-08-2018, மதியம், 2.50
945 அருகதை யற்றவன்
அருகினில் வந்திட
அருகதை இல்லை
ஆறுதல் பெற்றிட
வாய்ப்புமே இல்லை
திருக்குள்ள இதயம்
செய்வதை அறியேன்
தெய்வமே வென்றிட
வழியைக் காணேன்
தீயதை மட்டுமே
தேடியே செல்லுது
தீமையில் மட்டுமே
மகிழ்ச்சியும் கொள்ளுது
வாய்மை என்பது
வாழ்வினில் போனது
வெறுமை மட்டுமே
எஞ்சியும் நின்றது
சுயநலம் ஒன்றையே
கொள்கையாய்க் கொண்டுள்ளேன்
சுயத்தை மட்டுமே
அதற்குமே நம்பினேன்
பிறர்நலம் என்பதை
சற்றுமே நினையேன்
பொதுநலம் அதனை
முற்றிலும் மறந்தேன்
என்கேடு அத்னைதையும்
எண்ணியே சொல்லிட
என்நாவும் கூசுது
என்னநான் செய்ய
அதனாலே நான்கொண்ட
மனபாரம் அதனை
நீக்கியே நானுமே
வழிகாணேன் உய்ய
என்பாவம் போக்கி
என்னைநீ மீட்டபின்
இப்பாரம் போக்க
வழியொன்று சொல்லு
உன்னிடம் வரஅஞ்சி
தூரமே நின்றிடும்
பாவிக்க ஏற்ற
பதிலைத் தந்திடு
நொறுங்குண்ட இதயம்
நறுங்குண்ட ஆவி
இரண்டையும் மீண்டும்
எனக்குமே தந்திடு
எப்போதும் உன்னாவி
என்னுள்ளே இருந்து
தப்பேதும் செய்யாது
தடுத்துமே காத்திட்டு
மத்திகிரி, 21-8-2018, இரவு, 11.45