946 அலட்சியம் செய்கிறேன்
அலட்சியம் செய்கிறேன்
பிறரை எளிதில்
ஆத்திரம் கொள்கிறேன்
உடனே மனதில்
ஒதுக்கி வைத்திட
உள்ளத்தில் நினைக்கிறேன்
ஒதுங்கி நின்று
என்னையே ஏய்க்கிறேன்
ஒத்து வராது
இனிமேல் என்று
உடனே நானும்
சொல்லி விடுகிறேன்
எப்படி எடுத்து
பிறர் சொன்னாலும்
கேட்டிட மட்டும்
நானுமே மறுக்கிறேன்
ஆயினும் மனதில்
நடந்ததை எண்ணி
ஆத்திரம் கொண்டு
அமைதியை இழக்கிறேன்
எதிர்மறை எண்ணம்
என்னிலே வளர்ந்து
என்னையே ஆள
இடமுமே தருகிறேன்
வீணாய்க் கற்பனை
பலவும் செய்து
கோபம் கொண்டு
அதனை வளர்த்து
எரியும் தீயில்
எண்ணை ஊற்றி
மேலும் மேலும்
நெருப்பை வளர்த்து
இறுதியில் அதுவும்
என்னை அழிக்க
இடமும் தந்து
முடிந்துமே போகிறேன்
{இந்த எனது
நிலையை அறிந்து
என்னை மீட்க
இரக்கம் கொண்டு
முடிந்த என்னை
மீண்டும் உயிர்த்து
உனது அருளால்
மீட்டுக் கொண்டாய்}
ஆயினும் இந்த
குணத்தின் மீது
இறுதி வெற்றி
இன்னும் இல்லை
இறுதி வரையில்
இதனுடனே
வாழ வேண்டும்
வழியும் இல்லை
மத்திகிரி, 21-8-2018, இரவு, 11.55
947 மனித மதம்
எத்தனை எளிதாக
மதங்களை தொகுத்தார்
எத்தனை எளிதாக
எல்லைகள் வகுத்தார்
முற்றிலும் அவைமூலம்
மனிதரைப் பிரித்தார்
மூடத்தனமான
கருத்தினை வைத்தார்
கருவினில் உருவாக்கி
வெளிவந்த போது
மாதமொன்ற ஒன்றை
சிசுமீது திணித்து
அடையாளம் சிலவற்றை
அதற்க்காய்த் தொகுத்து
அதற்கேற்ப அதனை
உருவேற்றி வைத்து
புரியாத வயதில்
தாம்கொண்ட கருத்தை
புரியாமல் அதற்கும்
சொல்லியே கொடுத்து
வளர்ந்த பின்னாலே
சுயமாய் சிந்திக்க
வழியேதும் இல்லாமல்
வாழவும் வைத்தார்
இதுபோல் நாமும்
வளர்ந்ததினாலே
எதுசரி தவறென
என்னவும் மறந்தோம்
நம்மதம் ஒன்றே
சிறந்தது என்று
பிறரது மதத்தை
காலால் மிதித்தோம்
அந்த வெறியும்
தலைக்குமே ஏற
அதனால் தீவிர
வாதத்தை வளர்த்தோம்
அதற்கு விலையை
நாமும் கொடுத்து
மனித குலத்தை
மெல்ல அழித்தோம்
அழிய வேண்டிய
மதத்தை வளர்த்து
அதன்பேரால் நாம்
நாமையே அழித்து
மானுடப் பண்பை
முற்றாய் இழந்து
மண்ணில் வாழ்ந்து
மனிதம் இழந்தோம்
மத்திகிரி, 22-8-2018, மதியம் 2.30
948 உண்மையா
எப்போதும் உன்னிடம்
தப்பாது வருவேன்
என்தேவை அனைத்தும்
உன்னிடம் சொல்வேன்
இப்போதும் அதையே
நானுமே செய்கிறேன்
தப்பாது நீவந்து
இணைந்திடச் சொல்கிறேன்
உன்னோடு பேசி
உறவாடும் போதிலே
உள்ளத்தில் உள்ளதை
உன்னிடம் சொல்லுவேன்
எண்ணிலாக் கேள்விகள்
என்முன் தோன்றிட
உன்னிலே அதற்கு
விடையைத் தேடுவேன்
உன்னிந்த உறவும்
உண்மையில் உள்ளதா
வீணான என்மனக்
கற்பனை என்பதா
இதுபோன்ற கேள்விகள்
பலவுமே வந்திட
எவ்வித பதிலை
நானுமே தந்திட
எனக்குள் நானுமே
என்னுடன் பேசிடும்
இவையாவும் உன்
உரையாடல் என்பதா?
எவ்வித பதிலைநீ
தருகின்ற போதிலும்
அவையாவும் என்
பதிலெனக் கொள்வதா?
புரியாது இதுபோலே
தவித்திடும் போதிலே
புதிராக நீயும்
இருந்திடக் கூடாது
அதற்காகத்தான்
நானுமே அழைக்கிறேன்
அறிந்தநீ வந்துமே
பதிலையும் தந்திடு
எதுவான போதிலும்
ஏற்றுக் கொள்கிறேன்
எவிதம் சொன்னாலும்
கேட்டுக் கொள்ளுவேன்
கண்களும் கசிந்திட
கரம்கூப்பி வருகிறேன்
நீதந்த பதிலுக்கு
நன்றியும் சொல்கிறேன்
உள்ளாக நீநின்று
உரைத்திடும் வார்த்தையை
உரைத்திட வழியில்லை
என்பதை அறிகிறேன்
வெளியாக நான்கூறும்
வார்த்தைகள் யாவுமே
உள்ளாக உன்னாவி
தந்ததை உணர்கிறேன்
அதனாலே நான்கொண்ட
ஐயமும் நீங்கிட
ஐயனே மீண்டுமே
உன்பாதம் பணிகிறேன்
மத்திகிரி, 23-8-2018, இரவு, 11.30
949 இயற்கையின் அழைப்பு
கூக்குகூவென குயில்களும் கூவின
குளிர்ந்த காற்றுமே அதனுடன் சேர்ந்தது
மயில்களும் தோகையை விரித்தே ஆடின
மனதும் அவற்றுடன் சேர்ந்தே பணிந்தது
எத்தனையோ பணிகள் இருந்திட்ட போதும்
இயற்கையும் அழைக்க மறுத்திட முடியுமா
இதயமும் ஏங்கி அவற்றுடன் தவிக்கையில்
இறைவனைப் பணியாமல் இருந்திட முடியுமா
இதற்கெனவே நம்மை இகத்தில் படைத்தான்
இயற்கையை அதற்குத் துணையாய் வைத்தான்
இதயத்தில் வந்து குடியும் புகுந்தான்
இசையினில் மயங்கி அருளும் பொழிவான்
அந்த அருளின் மழையில் நனைவோம்
இன்ப இசையால் அவனதுத் துதிப்போம்
இயற்கை அழைக்கும் அழைப்பை ஏற்று
இதயம் நிறைந்து அவனைப் பணிவோம்
துதிக்கும் போது கால நேரம்
தடைகள் எதுவும் தருவது இல்லை
தடைகள் எதுவும் இடையில் வரினும்
துதித்துப் பாடிட நிலைப்பதும் இல்லை
தடைகள் இன்றி துதிக்கும் இயற்கை
தந்திடும் நமக்கு அறிய வாய்ப்பை
உணர்ந்து நாமும் இணைந்து கொள்வோம்
உருகிப் பாடி பணிந்து சொல்வோம்
மத்திகிரி, 25-8-2018, காலை, 5.50 am.
950 அதிகாரமில்லை
துக்கத்தை கொண்டாட நேரமில்லை
துன்பத்தை சுமந்திடத் தேவையில்லை
நீவந்து என்னையும் மீட்டபின்னே
இதற்கெல்லாம் இப்போது வாய்ப்புமில்லை
பாவத்தின் வலிமையை நீபோக்கினாய்
மரணத்தின் கூரையும் நீயொடித்தாய்
அதனாலே அவற்றுக்குப் பெலனுமில்லை
அவைஎண்ணி பயந்திடத் தேவையில்லை
தப்புகள் தவறுகள் செய்யும்போது
அதற்கேற்ப தண்டனை வருவதுண்டு
அவைசெய்யா மனிதனும் எவனுமில்லை
அதனாலே மனமொடியத் தேவையில்லை
நீவந்து எமக்காக செய்ததுமே
இவைமீது வெற்றியைத் தரவேண்டித்தான்
ஆயினும் அவற்றாலே தோற்கும்போது
அதையெண்ணி அஞ்சிடத் தேவையில்லை
உள்ளாக நீதந்த உன்னாவியும்
உயிர்பித்து எம்மையும் வழிநடத்தும்
தப்புத் தவறுகள் செய்யும்போது
தவறாமல் எம்மையும் எச்சரிக்கும்
பாவப் பரிகாரம் நீசெய்த பின்னே
பாவத்திற் கதிகாரம் என்னில் இல்லை
ஆயினும் பலவீனம் தாக்கும்போது
அதற்கு என்மேல் வெற்றியில்லை
மத்திகிரி, 27-8-2018, இரவு, 10.30