951 எனது எல்லை
வரையரை ஏதுமே உனக்குமே இல்லை
எந்த வரைவுக்குள் நீ வருவதும் இல்லை
எவ்விதம் உன்னை உணர்ந்திட்ட போதும்
சொல்லிட எவ்வித வழியுமே இல்லை
படைத்து காத்து அழிக்கின்றாய் என்று
பலவிதம் உன்னைக் கூறுவதெல்லாம்
மொழிகள் எமக்கு சொல்லிக் கொடுத்த
உவமைகள் அன்றி வேறெதும் இல்லை
எண்ணத்தால் எண்ணித்தான் புரிந்திடுவேனோ
எண்ணத்தைத் தாண்டித்தான் உனையறிவேனோ
அறிந்தவை அனைத்தும் எண்ணத்தின் செயலே
என்பதை நானும் மறுத்திடுவேனோ
மறையின் மூலம் முழுதாய் உன்னை
அறிந்திட எமக்கு வழியும் இல்லை
ஆயினும் எமது எல்லையை உணர்ந்து
அதையும் தந்தாய் அறிய உன்னை
எந்த உறையும் அந்த மறையை
முழுதாய் அறிந்து உரைக்கவும் இல்லை
நாங்கள் அளிக்கும் விளக்கம் மூலம்
உன்னை விளங்கிட வழியும் இல்லை
இதனை நானும் நன்கு உணர்ந்து
எனது எல்லையை அறிந்து கொண்டேன்
எனவே உன்னைப்@ புரிய வேண்டி
எவ்வித முயற்சியும் இனிமேல் செய்யேன்
மத்திகிரி, 27-8-18, இரவு, 11.30
952 உன் தனித்துவம்
நீதரும்போது தனித்துவம் இருக்கும்
நான் பெறும்போது நிறைவுமே இருக்கும்
தந்திட வாய்ப்புகள் ஆயிரம் இருக்கும்
பெற்றிட எனக்கு தகுதியும் இருக்கும்
எப்போது என்பது உனக்குத்தான் தெரியும்
என்தேவை எத்தனை இருந்திட்டபோதும்
முன்னறிந்த நீ செய்கின்ற போது
முற்றான நம்பிக்கை உன்மீது இருக்கும்
இதுவரை அதுபோல் செய்ததை எண்ணி
என்மனம் அமைதியாய் எதிர்பார்த்து நிற்கும்
இடையினில் தாமதம் நீசெய்யும்போது
அதிலுள்ள காரணம் எனக்குமே புரியும்
ஆயினும் ஒருவித அச்சமும் இருக்கும்
அதற்கான காரணம் உனக்குமே தெரியும்
நீடித்த தாமதம் கோபத்தை கிளற
உன்னிடம் வழக்காட என்மனம் துடிக்கும்
எத்தனை வாதங்கள் நான்செய்த போதும்
எடுபடாது உன்முன் அவற்றில் எதுவும்
அதைத்தான் எண்ணி அச்சமும் கொண்டேன்
அதனை அறிந்து இரங்கிடு என்றேன்
தனித்து தரவும் தெரிந்த உனக்கு
எடுத்து நானிதை சொல்லிட முடியுமா
பெற்றிடும் தகுதியை தந்தது யாரென்று
உனக்கே நானும் சொல்லவும் வேண்டுமோ
மத்திகிரி, 29-8-2018, இரவு, 11.10
953 வதைக்கிறேன் மீண்டும்
வதைக்கிறேன் மீண்டும்
வள்ளலே உன்னை
விலைதந்து என்னை
மீட்டிட்ட போதும்
தடுமாறும் போது
மீண்டும் மரமேற்றி
தயங்காமல் ஆணி
அடிக்கிறேன் நானும்
புரையோடிப் போன
பாவ குணமதும்
ஒருநாளும் போகாது
உயிர்வாழும் வரையும்
நீசெய்த பரிகாரம்
அதையே நினைவூட்ட
கரமேந்தி வந்தேன்
மீண்டும் மீண்டும்
புத்தியால் புரிந்து
நான் வரவில்லை
முக்தி பெறவேண்டி
வருகிறேன் நானும்
இறுதி வரையிலே
என்னுள்ளே போராட
உன்னரு தரவேண்டி
கெஞ்சியே நின்றேன்
தடுமாறும் போதெல்லாம்
நிலைமாறி போகாமல்
தாங்கிச் சுமந்திட
அழைக்கிறேன் உன்னை
போராடி நான்வீழ்ந்து
அடிப்பட்டுக் கிடக்கையில்
மருந்திட்டு குணமாக்க
மன்றாடி நிற்கிறேன்
மீண்டும் சுகமாக்கி
போராட துணைநின்று
இறுதியில் கரைசேர்ப்பாய்
என்றுமே அறிகிறேன்
அதுவரை குருவாகி
அனுதினம் வழிகாட்டி
என்னைநீ நடத்திட
தருகிறேன் என்னை
மத்திகிரி, 29-8-2018, இரவு, 11.50
954 நீயே இறக்கு
பாவத்தின் பாரமும் தாங்கவில்லை
பாவத்தின் தன்மையும் புரியவில்லை
எவர்வைத்தார் என்னுள்ளே இதனைஎன்று
இதுவரை எனக்கும் புரியவே இல்லை
ஆதி மனிதனின் பாவத்தின் தன்மை
அதுவாக என்னுள்ளே வந்தது என்று
வேதத்தின் மூலமே விளக்கிக் கூறி
என்னையும் ஏற்றிட பிறருமே சொன்னார்
கருமத்தால் வந்த பலனும் என்று
கடந்த பிறவிமுதல் தொடர்ந்தது என்று
நாம் செய்த கருமத்தால் வந்தது என்று
நம்மையும் ஏற்றிடச் சொன்னார் சிலபேர்
பாவம், கர்மம் என்பது எல்லாம்
நம்மீது பிறர்வைத்த பாரம் என்று
அரைகூவல் இட்டு அழைத்த பிறரும்
அவற்றை தூக்கி எறியவும் சொன்னார்
எதை ஏற்க எதைவிட என்பதுவும்
என்முன் உள்ள கேள்வி அல்ல
எதுவான போதிலும் எனது நிலைமை
பாரமாய்ப் போனது என்பதே உண்மை
தப்பு, தவறு, பாவம் என்று
சொற்களின் மூலம் எதைச் சொன்னாலும்
என்னுள்ளே ஏதோ குறையொன்று உள்ளது
எப்படி நானதை போக்குவதுதென்று
இதற்கான விடைதேடி அலைந்த போது
விடையாக வந்தாய் நீயும் அன்று
குருசினில் என்பாவம் போக்கவென்று
குருதியை சிந்தினாய் நீயும் நன்று
ஏற்பதும் மறுப்பதும் இனியுன் பாடு
என்றே என்மீது பொறுப்பை வைத்தாய்
அதன்பாரம் தாங்காது நானும் வந்தேன்
ஐயனே நீயே இறக்கிட்டு என்றேன்
மத்திகிரி, 30-8-2018, மதியம் 2.40
955 உன் கடன்
நீபார்த்துத் தந்தால்
நாங்களும் பிழைப்போம்
நீதர மறுத்தால்
வேறெங்கு போவோம்
மண்ணுயிர் காக்கவே
தன்னுயிர் தந்தநீ
எம்முடல் காக்கவும்
இரங்கிட வேண்டும்
நோய்நொடி நீங்க
பசிப்பிணிப் போக
மனுக்குலம் வாழ
உன்னருள் தேவை
பயிர்களும் செழிக்க
உழவரும் மகிழ
மழையைத் தருவது
உனக்குள்ள வேலை
ஏற்ற காலத்தில்
அறுவடை செய்ய
பருவ காலத்தில்
பயிரிட வேண்டும்
இயற்கையின் ஒவ்வொரு
அசைவையும் அமைத்த
உனக்கு நானிதை
சொல்லவா வேண்டும்
மரத்தை வைத்தவன்
நீரும் ஊற்றுவான்
என்ற பழமொழி
உனக்கென உள்ளது
அத்தனை நம்பிக்கை
வைத்த மனிதரும்
வேறென்ன உன்னிடம்
வேண்டி வருவது
நல்லோர் தீயோர்
பேதமும் இன்றி
நலக்களை அளிப்பது
உனக்குள்ள குணமே
அதன்படி செய்து
எம்மையும் காப்பது
உனக்கென நீயே
கொண்ட கடனே
அதனை உணர்ந்து
தந்த மழைக்காய்
நன்றி கூறுதல்
எமக்குள பணியே
ஆயினும் அறுவடை
முடிந்திடும் மட்டும்
இந்தக் கருணை
தொடர்ந்திட வேண்டும்
இல்லை என்றால்
இடை இடையே
வேறொரு பாடலும்
வரவும் கூடும்
மத்திகிரி, 31-8-2018, இரவு, 11.45