391 அருளுண்டு
அருளுண்டு மருளில்லை மனமே
அண்டிடும் அடியார்க்கு அருள்வான் தினமே–அருளுண்டு…
குறைகளைக் கண்டு குழப்பமும் கொண்டு
குணமின்றி வாழ்விலே கலக்கமும் கொண்டு
வெருண்டு, மருண்டு, அரண்டு, உருண்டு
விடைதேடி அவனிடம் சென்றிடும் போது–அருளுண்டு…
அஞ்சிடாதே அவனே காப்பான், நம்மை
ஆதரித்து கரையும் சேர்ப்பான், இனி
கலங்கிக், கதறி, பயந்து, வெதும்பி
காவலைத் தேடியே சென்றிடும் போது–அருளுண்டு…
போராடிப் பயனேதும் இனி இல்லை
புலம்பினால் ஆவது ஏதுமே இல்லை
நாடி, தேடி, ஆடி, ஓடியே
நாளெலாம் வாடி நின்றிடும் போது–அருளுண்டு…
என்னதான் செய்வது இனிமேல் என்று
ஏக்கமே கொண்டு தவித்து தயங்கி,
நடுங்கி, ஒடுங்கி, அடங்கி, மயங்கி
நாதனின் பாதத்தை தேடியே ஓடிட–அருளுண்டு…
17-2-16 & 4-3-16, மதியம் 2.00, மத்திகிரி
392 இருதலைக் கொள்ளி
சொல்லத்தான் முடியுமோ
சொல்லிட வேண்டுமோ
சொல்லிலே வடித்தாலும்
என்னெண்ணம் புரியுமோ?
சொல்லாலே மொழியாலே
கூறியும் பயனென்ன
சோர்வுண்ட மனதிற்கு
நீகூறும் பதிலென்ன?
இருதலைக் கொள்ளியிடை
எறும்பாகத் தவிக்கிறேன்
இதனைநீயும் கூடத்தான்
வேடிக்கைப் பார்க்கிறாய்
ஏனோ உடல்தந்தாய்
எண்ணமும் உடன்தந்தாய்
இரண்டுக்கும் இடையினில்
முரண்பாட்டை ஏன்வைத்தாய்?
உடலோ மனதை
ஒருபுறம் தாக்குது
மனமோ மறுபுறம்
அதனையும் எதிர்க்குது
இடையில் என்னுயிர்
அடிப்பட்டு தவிக்குது
இரண்டுக்கும் நடுவினில்
தினம்தினம் தவிக்குது
இதைவிட எப்படி
என்நிலை சொல்வது
என்னவோ செய்யினி
நானென்ன செய்வது?
10-3-16, மத்திகிரி, மதியம், 2.00
393 என்நோய்க்கு மருந்து
மோகம் கொண்டு நான் தவித்தேனே
மேல் மூச்சு வாங்க இளைத்தேனே
காண வருகிறேன் என்று சொன்னவன்
காக்க வைத்து எங்கு சென்றானோ?
நாடித் தேடி நானும் ஓடினேனே
நாளும் பொழுதும் எங்கும் தேடினேனே
ஆயினும் நான் தவிப்பதை காண்பதில்
அவனுக்கென்ன ஆர்வம் புரியவில்லை
மேனிதானும் இங்கு இளைக்க லாச்சே
என்மேன்மையும் அதனுடன் தாழலாச்சே
நாலுபேர் பலவிதம் பேசலாச்சே
நாணம்-வெட்கம் என்னில் நீங்கலாச்சே
காமம் கொண்டேன் என்று கூறுகிறார்
என்காதல் அறியாது பேசுகிறார்
ஊர்கூடி பலவிதம் தூற்றுகிறார்
எனுள்ளத்தை அறியாது ஏசுகிறார்
யார் என்ன சொன்னாலும் சொல்லட்டுமே
எவர்வந்து எனக்கிங்கு உதவி செய்வார்
நான்கொண்ட பக்தியை உணர்ந்தவனறி
என்நோய் தீர்க்கும் மருந்து யாரறிவார்?
15-3-16, மத்திகிரி, மதியம் 2.15
394 இரக்சியம் வெளிப்படும்
உள்ளபடி உரைக்காது
உண்மையை உணராது
உணர்ச்சியின் வேகத்தில்
வாழ்வதும் முறையாமோ
உண்மையை உணர்ந்தாலும்
உள்ளதை உரைத்தாலும்
உள்ளத்தின் நிலமையும்
நன்றாகப் புரியுமோ
நாளொரு பேசாச்சு
நல்லவன்போல் நடிச்சாசு
ஆயினும் அடிமனதில்
உண்மையை புதைச்சாச்சு
பகட்டாகப் பலபேசி
பலரையும் ஏமாற்றி
சிலநேரம் வென்றாலும்
சீக்கிரம் வெளியாகும்
மறைவாக ஏதுமுண்டோ
மறைப்பதில் பொருளுண்டோ
மனிதரை அறிந்தவன்
மனதினுள் இருக்கையில்
வெளிப்படும் இரகசியம்
வெளியாகும் முன்பாக
உரைத்திடு அவனிடம்
உன்னையே காத்திட
மத்திகிரி, 15-3-16, மதியம் 2,50
395 எளிய வழி
“ஐம்புலன்களையும் அடக்கிட வேண்டும்
அதனுடன் (மும்)மலங்களை அறுத்திட வேண்டும்
இன்னும் பலவித தவங்களை இயற்றினால்
இறைவன் திருவடி அடைந்திட முடியும்”
என்று பலவித விதிகளை உரைத்தார்
இதனுடன் பலவித சடங்குகள் சமைத்தார்
எப்படியேனும் இறைவனை அடைய
எத்தனை கடின வழிகளை அமைத்தார்
வென்றவர் எத்தனை எவரறிவாரோ
விரும்பிய இறைவனை அடைந்தவர் யாரோ
தோற்றவர் கோடிகள் நானறிவேனே
அவர்களில் அடியனும் ஒருவன் என்பேனே
அடாங்கா புலன்களில் தோற்றதனாலே
அறுத்திட முடியா மலங்களினாலே
எவ்வித தவமும் செய்திட அறியா
எளியோர்க் கெளிய வழி அறிந்தேனே
பக்தி என்ற படகினில் ஏறி
பாவம் என்னும் கடலிடை ஓ(ட்)டி
கிருபை என்ற துடுப்பைக் கொண்டு
கரைசேரும் வழியும் நானறிந்தேனே.
19-3-16, மத்திகிரி, மதியம். 2.30
396 ஒரு இரகசியம்
ஞானிக்கு மறைத்து
பேதைக்கு அளித்த
இரகசியம் தன்னை
நானும் அறிந்தேன்
ஞானத்தின் ஞானத்தால்
நானுமே தேடினேன்
ஞானம் எதுவென
சரியாகப் புரியாமல்
நூல்பலப் படித்து
நுட்பமாய்த் தேடி
ஆழ்ந்து சிந்தித்து
ஆராய்ந்தும் பார்த்தேன்
அறிந்தவர் சொன்ன
வாதங்கள் கேட்டேன்
அவர்போல் பிறருடன்
வாதித்தும் பார்த்தேன்
ஆசான் அருளினால்
அடைய வேண்டி
அனுதினம் நானும்
தேடி அலைந்தேன்
எத்தனை முயன்றும்
என்பெலன் கொண்டு
அடைய முடியாத
இரகசியம் புரிந்தேன்
அந்த ஞானம்
அடைந்த உடனே
அவனே வந்தான்
என்னைத் தேடி
பேதமை போக்கி
பாவத்தை நீக்கி
முக்தியை அளிக்கும்
பக்தியைத் தந்தான்
மத்திகிரி, 21-3-16, மதியம் 2.50
397 யார் அயலான்?
அந்தப்படியே நீ போய் செய்
அடுத்தவன் தேவைக்கு உதவிசெய்–அந்தப்படி
காயப்பட்டவனைக் கண்டார்
கண்ணை மூடி விலகியே சென்றார்
பாவப்பாட்டு இரக்கம் கொண்டு
ஏதுமே செய்யாமல் சென்றவர்போல் அல்லாமல்–அந்தப்படி
அந்த வழிவந்த ஓர் அந்நியன்
அவன்மேல் இரங்கி கருணைக் கொண்டு
எண்ணையும் இட்டு காயத்தை ஆற்றி
ஏற்ற உதவிகள் செய்ததுபோல் நீயும்–அந்தப்படி
நல்லவனாய்த் தன்னைக் காட்ட
நாலு பேர்மெச்ச கேள்வியும் கேட்ட
சினத் தனமான சிந்தையும் கொண்ட
சிறுவனை நோக்கி ஐயனும் சொன்னான்
அந்நியன் என்பவன் யாரோ?
உனக் கயலான் என்பவன் எவரோ
தேவைகள் உள்ளோர் அயலாரே
தேடி உதவிட உன்சொந்தம் ஆவாரே–அந்தப்படி
ஆயினும் சோகமே கொண்டான்
ஆஸ்தியின் மீது மோகமே கொண்டான்
கேட்ட கேள்விக்கு ஏற்ற விடைபெற்றும்
தேளாதவன் போல் பதில் பேசாமல் சென்றான்–அநதப்படி…
22-3-16, மத்திகிரி, மதியம் 2.45
398 கடன்தீர்த்தாய்
தொங்கிடும் போதும் நினைந்தாயே
அந்தத் துன்பத்தில் என்பாரம் சுமந்தாயே
நன்மைகள் எனக்காய் துறந்தாயே
நானுய்ய உன்னையே தந்தாயே
ஆதிமுதல் கொண்ட அன்பினாலே
அளித்தாய் உன்னுயர் பண்பினாலே
என்மீறுதலுக்காக காயப்பட்டாய்
உன்மேனியில் எனக்காய் துன்பப்பட்டாய்
தாகம் கொண்டு தவித்தபோதும்
தகப்பன் கைவிட்டு வெறுத்தபோதும்
அந்நிலையிலும் என்மீது மனதுருகி
ஐயனே எம்பிழை மன்னித்தாய்
எல்லாம் முடிந்து என்றுசொல்லி
எனக்காய் உன்னுயிர் தந்தநீயும்
என்றும் முடியாத என்கடனை
தீர்த்திட நீயும் தலைசாய்த்தாய்
கைமாறு என்ன நான் செய்திடுவேன்
பட்ட கடனை எப்படி தீர்த்திடுவேன்
தீர்க்க முடியாத காரணத்தால்
தந்தேன் அடிமைத் தொண்டுசெய்ய
25-3-16, மத்திகிரி, மதியம் 2.15
399 காலம் கடந்த ஞானம்
உடலாலும் இனி முடியாது
உள்ளத்தில் தெம்பும் கிடையாது
நடை பிணமாய் வாழும்போது
நானென்ன செய்வது நீயேசொல்லு
உடலில் தெம்பும் இருந்தபோது
உன்னை நினைக்க நேரம் ஏது?
உள்ளமும் போட்ட ஆட்டத்திலே
உனக்கும் நேரமே கிடையாது
எந்நேரமும் என்னை எண்ணி
என்தேவையை மட்டுமே முன்நிறுத்தி
ஆடிய ஆட்டத்தை என்னசொல்ல
ஐயோ அந்நிலைக் கென்னசொல்ல
தேடிய சுகங்கள் கொஞ்சமல்ல
தேடி அலைந்தது கொஞ்சமல்ல
உடலை மட்டுமே முன்நிறுத்தி
உழன்று கிடந்தேன் கும்பிதன்னில்
ஆயினும் அந்த நாற்றம்கூட
இன்பமாய் இருந்த காலமுண்டு
சேற்றிலிருந்து நீ தூக்கியபின்
அந்த அவலமெண்ணி நொந்ததுண்டு
இறுதி நிலைக்கு வந்தபின்னும்
இன்னும் அடங்கலை மனதும்கூட
இந்த நிலையில் என்னைமீட்க
தந்தாயே இனி என்ன சொல்ல?
உடலோடு மனதை உனக்களித்தேன்
உள்ளத்தில் உன்னையே நானும்வைத்தேன்
காலம் கடந்த ஞானம் வந்தும்
காத்திடு என்று நானும் வந்தேன்
மத்திகிரி, 25-3-16, மதியம் 2.45
400 எதைக் கூற?
கொஞ்சமோ எதைக் கூற
எந்த குறையைச் சொல்லி வாட
அஞ்சி அஞ்சி வந்து அபயமென்றிட
ஆறுதலாய் ஒரு வார்த்தையும் பெற–கொஞ்சமோ
கஞ்சத்தனமின்றி நன்மைகள் செய்தாய்
கலங்கும் நேரத்தில் ஆறுதல் சொன்னாய்
மிஞ்சிய அன்பால் என்னையும் வென்றாய்
மீட்டு அருளிட உன்னையும் தந்தாய்–கொஞ்சமோ
தந்த வாக்கினில் மாற்றமும் இல்லை
தாழ்மைக்கு உன்னிடம் பஞ்சமும் இல்லை
அன்பைப் பொழிவதில் வஞ்சமும் இல்லை
அதனை மறுக்க இடமும் இல்லை–கொஞ்சமோ
காணாமல் போனாலும் மீட்டிட வந்தாய்
கதறும் குரல்கேட்டு ஓடியே வந்தாய்
பாவி என்று புறம் தள்ளிவைக்காமல்
பரிவுகொண்டு மன்னிப்பும் தந்தாய்–கொஞ்சமோ
இத்தனை பெற்றும் வெறுத்தேன்
எத்தனை கூறினும் ஏற்க மறுத்தேன்
எனெண்ணம் போலவே வாழ நினைத்தேன்
ஏனோ உண்மையை காண மறுத்தேன்
ஆயினும் அதிக பரிவும் கொண்டு
அமைதி காத்து பொறுமை கொண்டு
திருந்தி மீண்டும் வந்திடும் போது
தட்டிக் கழிக்காமல் சேர்த்து அணைத்தாய்–கொஞ்சமோ
27-3-16, மத்திகிரி, மதியம் 2.00