481 நியாயமான பார்வை
எத்தனை எளிதாக
கருத்தினைச் சொல்லலாம்
இருபுறம் உள்ள
உண்மையைப் பாராமல்
ஒரு முகமாக
பார்த்திடும் போது
முழுவதுமாக
உண்மையும் புரியாது
குறையும் நிறையும்
பார்வையில் உள்ளது
என்றுமே கூறி
தப்பிக்க முடியாது
எதைப் பார்க்கநாமும்
விரும்புறோம் என்பதில்
மட்டுமே உள்ளது
பார்வையின் தீர்ப்பும்
ஆயினும் அதுவே
இறுதியும் ஆகாது
அதற்கும் கூட
காரணம் உள்ளது
குறைநிறை இரண்டையும்
எவ்விதம் பார்க்கிறோம்
என்பதில் உள்ளது
உண்மையின் நிலையும்
இத்தனைக் கோணங்கள்
உள்ள நிலையில்
எவ்விதக் கருத்தை
நாமுமே சொல்வது?
அதற்கான தீர்வை
வள்ளுவன் தந்துள்ளார்@
அதன்படி சொல்வதே
யாருக்கும்நல்லது
தூக்குக் கோலின்
முள்ளினைப் போல
ஒருபுறம் சாயாமல்
இருந்திடும் போது
சொல்லிடும் கருத்தின்
உண்மையும் விளங்கும்
சொல்லிடும் முறையிலும்
நியாயம் இருந்திடும்
மத்திகிரி, 18-10-2018, இரவு, 11.45
@சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி—குரள் 118