1003 பெயரற்ற நிலை
எழுத்திலே எழுதி
எவருமே சொல்லலாம்
சிந்தையில் வந்திடும்
எண்ணத்தின் ஓட்டத்தை
எழுத்தாக்கி எதையுமே
எவருமே சொல்லினும்
இதயத்தின் ஓட்டத்தை
எவர்சொல்லக் கூடும்
ஆன்மாவில் தோன்றும்
அரிதான உணர்வை
அறிவுக்கு அப்பாலே
சென்றுதான் பார்க்கணும்
அதுவந்து நம்மோடு
இடைபடும் போது
ஆன்மாவும் கூட
மவுனமே காக்கணும்
அப்போது தோன்றும்
பேரின்ப நிலைக்கு
எப்பெயரும் வைக்காமல்
இருந்திட வேண்டும்
இறைவனும் நம்மோடு
இடைபடும் பேற்றினை
எம்மொழி கொண்டுமே
சொல்லா திருக்கணும்
எப்படி முயன்றாலும்
எச்சொல் கிடைத்தாலும்
இறுதியில் அதுவும்தன்
தோல்வியை அறியணும்
இதயமும் ஆன்மாவும்
இசைந்து ஒன்றாகி
இடைபடும் இறைவனை
பணிந்திட வேண்டும்
அபோது உண்டாகும்
ஆனந்த நிலையது
எப்போதும் நிலைத்திட
இறைவனை வேண்டனும்
அதன்பின் அதனையும்
எழுத்தாக்க முயலாமல்
அவனின் அருளாலே
அவன்தாள் வணங்கனும்
மத்திகிரி, 31-10-2018, இரவு, 11.30