1020 குழந்தைபோல் ஆகணும்
என்னையும் அணைக்க
உன்கரம் நீளணும்
என்னையும் தோள்மீது
நீவைக்க வேண்டும்
குழவியாய் மாறியே
மழலை நான்பேச
கொஞ்சியே என்னை
சீராட்ட வேண்டும்
சிறுபிள்ளை போலவே
ஏன்வரச் சொன்னாய்
என்பதை நானும்
எண்ணிடும் போது
அதிலுள்ள இரகசியம்
நீகாணச் செய்தாய்
அதனாலே வந்தேன்
அதுபோல நானும்
பிள்ளையின் குணத்தினை
எண்ணிடும் போது
இழந்தது எத்தனை
என்பது புரியாது
மீண்டும் குழந்தையாய்
மாறிடும் போது
எப்போதும் அதுபோல
இருந்திடத் தோணுது
ஆயினும் பாழான
மனதோடு உள்ள
அனுதினப் போராட்டம்
மிகமிக் கொடியது
அதைவென்று மீண்டும்
குழந்தையாய் ஆவது
அத்தனை எளிதல்ல
நன்றாகப் புரியுது
ஆயினும் உன்னிடம்
குழந்தைபோல் வருவது
மிகமிக அவசியம்
என்பதும் தெரியுது
அதற்கான தகுதியோ
ஒன்றுதான் உள்ளது
அதையுமே பெறுவது
அரிதாக உள்ளது
உடலுமே தளர்ந்து
ஒருநாள் மீண்டும்
குழந்தைபோல் ஆகி
தளர்நடை போடும்
மனதுமோ அதுபோல
மாறிட மட்டும்
முடியாது என்றே
பிடிவாதம் பிடிக்கும்
அங்குதான் மீண்டும்
உன்கரம் நீட்டி
அன்புடன் என்னை
குழந்தைபோல் தூக்கி
பிடிவாத மனதையும்
மனமாறச் செய்து
குழந்தைபோல் வாழ
அருளிட வேண்டும்
மத்திகிரி, 29-11-2018, இரவு, 10.40. மாற்கு, 10:16.