நிற்காத ஓட்டம்
நாளும் சுகத்தை நாடியே தேடுறோம்
நாடி அதற்காய் நாங்களும் ஓடுறோம்
சுகம் எதுவெனச் சரியாகப் புரியலை
சிந்தைக்கும் அதுகூட சற்றும் விளங்கலை
உடலின் தேவையை ஒவ்வொன்றாய் எண்ணி
ஓயாமல் அதற்காக யோசனைப் பண்ணி
தெளிவாக யோசித்து திட்டமும் போட்டு
செய்கிறோம் செயல்கள் பிறரையும் கேட்டு
அடையும் வரைக்கும் தேடுதல் ஓயாது
அடைந்த பின்னுமோ நிம்மதி கிடையாது
இடையூராக எவரேனும் வந்தால்
வந்திடும் கோபத்தை தாங்கிட முடியாது
மோகத்தைத் தடுக்க ஆத்திரம் பிறக்கும்
ஆத்திரம் வந்திட புத்தியும் மயங்கும்
புத்தியும் மயங்கிட கலகமும் பிறக்கும்
கலகம் பிறந்திட காரியம் கெடும்
எது எப்படி ஆயினும் என்ன
எத்தனை இடையூறு வந்தாலும் என்ன
நினைத்தது கையில் கிடைத்திடும் வரையில்
எதனைக் கூறினும் ஏறுமா என்ன
வட்டமே போட்டு ஓடுகிறோமோ
வகை தெரியாமல் தேடுகிறோமோ
இலக்கு எதுவெனத் தெரியவும் இல்லை
எங்கே தொடங்கினோம் புரியவும் இல்லை
ஆயினும் ஓட்டாத்தை நிறுத்தவும் இல்லை
அடையும் இலக்கு கண்ணில் படலை
பிறரைப் போல நானும் ஓட
சுற்றி வருவது நிற்கவும் இல்லை
6-5-16, பெங்களூரு, காலை, 5.30