என்னவோ நானுமே உன்னிடம் கூவுறேன்
ஏழைக்கு இரங்கிட நானுமே வேண்டுறேன்
நல்ல படியாக நாளுமே வாழ
நானுன் பாதமே அண்டி வந்தேனே
புதிதாகச் சொல்லிட ஏதுமே இல்லை
புதிராக உனக்கு ஒன்றுமே இல்லை
என்னுள்ளம் முழுமையாய் அறிந்திட்ட உனக்கு
ஏதுமே சொலிடத் தேவையும் இல்லை
சொன்னதைச் சொல்லியே சோர்ந்து போனேனே
சொல்லாமல் விட்டாலும் சோர்ந்துமே போவேனே
செவி கொடுக்க நீயுள்ள வரையில்
சற்றேனும் வாய்மூடி இருக்க மாட்டேனே
புலம்பிடும் மனிதனை எவருமே விரும்பார்
பொழுதெல்லாம் குறைசொல்ல யாருமே கேட்கார்
பாடுள்ள மனிதரே அவரென்ன செய்வார்
பாரம் சுமந்துமே இளைத்துமே போனார்
ஆனால்நீ அவர்போல இல்லாததாலே
அடிக்கடி வந்தேனே என்குறை சொல்ல
பலபேரின் குறைகளை கேட்டிடும்போது
இரைச்சலில் என்குரல் எட்டுதா சொல்லு
இந்த சந்தேகம் வந்ததினாலே
என்குரல் உனக்கும் எட்டிட வேண்டி
கூவி அழைக்கிறேன் குரலை உயர்த்தி
கேட்குதா உனக்கு அதைமட்டும் சொல்லு
அதுவே காரணம் நான்கூவி அழைக்க
ஆயினும் தப்பீது ஐயனே பொறுக்க
என்னுள்ளே இருக்கின்ற உன்செவி கேட்க
எதற்காக கூவனும் மற்றவர் கேட்க
மெளனமாய் நான்வந்து பாதமே அமர்ந்து
ஏதுமே சொல்லாமல் உன்னுடன் இருந்து
நீசொல்ல வருவதை நான்கேட்கும் போது
கூவுதல் முற்றாக நிற்கும் அப்போது
பெங்களூரு, 6-5-16, இரவு, 10.00